கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. ஏனெனில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், நோய் தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பல இறங்கியுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது ஜின் டிஸ்டில்லரி நிறுவனத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை குறைக்கும்விதமாக, மருவத்துவமனைகளுக்கு கிருமி நாசினி மருந்துகளைத் தயாரிக்க முடிவுசெய்துள்ளாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வார்னே, ஆஸ்திரேலிய விருது பெற்ற தனது நிறுவனத்தின் செவன் ஜீரோ எயிட் ஜின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, இரண்டு அறுவை சிகிச்சை வல்லுநர்களைக் கொண்டு 70 விழுக்காடு ஆல்கஹாலைக் கொண்ட கிருமி நாசினி மருந்தின் (Hand sanitiser) உற்பத்தியைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இது ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சவாலான நேரம், இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது சுகாதார அமைப்புக்கு உதவுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றவர்களும் இதனைச் செய்ய, எனது முயற்சி அவர்களுக்கு ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஆறு பேர் உயிரிழந்தும், 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரீஸிடமிருந்து ஒலிம்பிக் சுடரைப் பெற்றுக்கொண்ட டோக்கியோ!