கிரிக்கெட் போட்டிகளில் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்துள்ளது. ஆனால், 2014ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் தேதி அன்று பவுன்சர் பந்தால் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் இவரது உயரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத வலியை தந்தது. அந்தவகையில், பிலிப் ஹியூஸின் நெருங்கிய நண்பராக இருந்தவர் டேவிட் வார்னர்.
பிலிப் ஹியஸ் மறைந்ததையடுத்து, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் பிலிப் ஹியூஸின் ரன்கள்தான் என வார்னர் உணர்ச்சி பொங்க தெரிவித்திருந்தார். அதேபோல், 2014இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது வார்னர் 63 ரன்கள் கடந்த போதெல்லாம், வானத்தை நோக்கி பிலிப் ஹியூஸை நினைவுகூர்ந்தார். பிலிப் ஹியூஸ் 63 ரன்களில் இருந்தபோது பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டதால், தான் வார்னர் ஒவ்வொரு முறையும் 63 ரன்கள் எடுக்கும்போதெல்லாம் அவர் நினைவாக இவ்வாறு நடந்துகொள்கிறார்.