தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#Ashes... இன்னும் பயிற்சி வேண்டுமோ? மீண்டும் சொதப்பிய ஆஸி. ஓப்பனர்ஸ்! - ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தடுமாறிவருகிறது.

Warner

By

Published : Sep 13, 2019, 5:16 PM IST

டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பட்லர்

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 64 ரன்களுடனும், ஜாக் லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மிட்சல் மார்ஷ்

இரண்டாம் ஆட்டநாள் இன்று தொடங்கி ஐந்து ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், பட்லர் 70 ரன்களிலும், ஜாக் லீச் 21 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இங்கிலாந்து அணி 87.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் மார்ஷ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றும் முதல் ஐந்து விக்கெட் இதுவாகும்.

இந்த வாட்டியும் ஃபார்முக்கு வர முடியாம போச்சே என்ற ஏமாற்றத்தில் வார்னர்

இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இத்தொடரில் ரன் குவிக்க மிகவும் தடுமாறிவரும் வார்னர் இந்தப் போட்டியிலும் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினார். வழக்கமாக ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சிற்கு இரையாகும் அவர், இம்முறை ஆர்ச்சருக்கு இரையாகியுள்ளார்.

மூன்று ரன்களுக்கு நடையைக் கட்டிய ஹாரிஸ்

அதன்பின், 'வார்னர் எங்கே போறிங்க இருங்க நான் உங்களுக்கு கம்பேனி தரேன் என்பதைப்போல், மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான மார்கஸ் ஹாரிஸ் மூன்று ரன்களுக்கு பெவிலியினுக்கு விரைந்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அணி ஆறு ஓவர்களில் 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது. ரன் குவிப்பில் நல்ல தொடக்கத்தைத் தருவதற்கு வார்னர் - ஹாரிஸ் இருவரும் தீவிர பயிற்சியில் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இக்கட்டான சூழ்நிலையில் பலமுறை அணியைக் காப்பாற்றிய ஸ்டீவ் ஸ்மித், இன்றும் ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சற்றுமுன் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களின் முடிவில் 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் ஆறு ரன்களுடனும், மார்னஸ் லாபுக்ஸாக்னே 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details