இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. மழையால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஜானி பெயர்ஸ்டோவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 77.1 ஓவர்களில் 258 ரன்களை எட்டி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
#Ashes: மீண்டும் சொதப்பிய வார்னர்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்டநாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 30 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜானி பெயர்ஸ்டோவ் 52, கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பெட் கம்மின்ஸ், ஹெசல்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியில் பென்கிராஃப்ட், வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இதில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் வார்னர் க்ளீன் போல்ட் ஆனார்.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தபோது, இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது. உஸ்மான் கவாஜா 18 ரன்களிலும், பென்கிராஃப்ட் ஐந்து ரன்களிலும் களத்தில் உள்ளனர். வார்னர் இதுவரை ஆடிய இன்னிங்ஸில் மொத்தம் 13 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது மோசமான ஃபார்ம் ஆஸ்திரேலிய அணியை பாதித்துள்ளது.