டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் டெஸ்டாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம், பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா, வங்கதேச அணிகள் இணைந்துள்ளன.
இந்த வரலாற்றில் இந்திய அணி இடம்பிடிக்க முக்கிய காரணமாக இருக்கும் பிசிசிஐயின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கும், கேப்டன் கோலிக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது பதிவில், அடுத்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்தத் தொடரின் போது இந்திய அணி அடிலெயிட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளதாக பதிவிட்டிருந்தார்.