சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 13) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சச்சின் - பத்ரிநாத் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சச்சின் அரைசதம் கடந்தார்.
பின்னர், 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பத்ரிநாத் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற, அவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கரும் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய யுவராஜ் சிங் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
அதிலும் பிரையன் வீசிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு, 21 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 60 ரன்களையும், யுவராஜ் சிங் 52 ரன்களையும் சேர்த்தனர்.