ஐசிசியின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பலரும் விராட் கோலிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கோலியின் ரசிகர்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக அவருக்கு வாழ்த்துக் கூறி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோலி பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "எனது அணிக்காக அதிக ரன்களை எடுக்க காத்திருக்கிறேன்" என்று 2010ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்த ட்வீட்டை அவர் பதிவிட்டிருந்தார்.
விராட் கோலி ட்விட்டர் பதிவு தற்போது ஐசிசியின் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் தான் ட்வீட் செய்திருந்த பதிவை, ரீட்வீட் செய்து கோலி தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "என்னுடைய குடும்பம், என் நண்பர்கள், என்னுடைய பயிற்சியாளர் மற்றும் இந்த 10 ஆண்டுகளில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த வாய்ப்பை பிசிசிஐ எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஐசிசி விருதுக்காக எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையுடன் உழைத்தால் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியும். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி'' என்று பதிவிட்டுள்ளார்.
கோலியின் இந்த இரண்டு ட்விட்டர் பதிவுகளும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியது போலவே கோலி அதிக ரன்களை எடுத்து மாஸ் காட்டிட்டார் என்று நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கடந்த 10 ஆண்டுகளில் மனதுக்கு நெருக்கமான தருணங்களை பகிர்ந்த கோலி...