இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இன்று தனது 32ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். ஐசிசியின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசைப் பட்டியிலில் முக்கிய இடத்தை வகிக்கும் இவர், 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் அறிமுகமானார். இதுவரை 288 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 11,867 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் தற்போது வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,240 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 254 ரன்கள் விளாசியுள்ளார். அதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் விளையாடி 2,794 ரன்களை எடுத்துள்ளார். இத்தனை சாதனைகளை கடந்து, கிங் கோலி என தனது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டுவரும் இவர், இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
அவருக்கு திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிவருகின்றனர்.
ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, "பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி. மென்மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.