இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் முடிவுபெற்றவுடன் வங்கதேச அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 3ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது. இதற்கான வங்கதேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வரும் அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. தற்போது இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுவிலிருந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில்,
"பணிச்சுமை காரணமாக கோலிக்கு ஓய்வு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், இந்த முடிவு குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு கோலியிடம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகுதான் பேசவுள்ளது. இதற்கு கோலி எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பொறுத்துதான் இந்த முடிவு எடுக்கப்படும்.
அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போதுவரை அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடிவருகிறார். தனது உடல் குறித்து அவர் நன்கு அறிவார். ஒருவேளை தனக்கு ஓய்வு தேவை என அவர் நினைத்தால் தேர்வுக்குழுவினரிடம் தாராளமாகக் கேட்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போதுவரை கோலி தொடர்ந்து 48 போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், டி20) இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஒருவேளை கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டால், ரோகித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிகிறது. கோலிக்கு ஓய்வு வழங்கப்படுமா என்பதற்கு அக்டோபர் 24ஆம் தேதி பதில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: 'தோனி செய்ததை நானும் செய்வேன்' - விராட் கோலி உறுதி