இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா இருவரும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இவர்கள் களத்தில் ஜோடி சேர்ந்தால் ரன் மழை பொழிவதோடு மட்டுமின்றி பல்வேறு சாதனைகளைப் படைப்பதும் இவர்களுக்கு கைவந்த கலை.
தற்போது இருவருக்கும் தங்களின் ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமான போட்டி ஒன்று நிலவுகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களுக்கான பட்டியலில், கோலி, ரோகித் ஷர்மா இருவரும் (20) முதலிடத்தில் உள்ளனர். இதனால், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் இவர்களில் எந்த வீரர் அரைசதம் அடித்து புதிய சாதனைப் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.