2019ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பயணித்து வந்த பாதையைக் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது,
"இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சந்தித்த தோல்வியை நாங்கள் ஒரு அணியாக மாற்ற விரும்பினோம். ஆனால், முன்னரே கூறியபடி ஒரு சில விஷயங்கள் அப்படியேத்தான் இருக்கும். அதுபோன்ற கடினமான நிலைமையை கடந்துவந்ததால்தான் இப்போது நாங்கள் இந்த இடத்தில் (சிறப்பாக) இருக்கிறோம்" என்றார்.
இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நடப்பு ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று இந்த ஆண்டை வெற்றியுடன் முடித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்திய அணி விளையாடிய எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஏழு வெற்றி ஒரு டிரா மட்டுமே செய்துள்ளது. அதேபோல, 28 ஒருநாள் போட்டிகளில் 19 வெற்றிகளும், 16 டி20 போட்டிகளில் ஒன்பது வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.