துபாய்: டி20 வரலாற்றில் 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரரான விராட் கோலி, பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய பின்னர் தரவரிசையில் இந்தியா பேட்ஸ்மேன்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
கடைசி டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்களைக் குவித்த கோலி, இப்போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழிசெய்தார். இதன்மூலம் தரவரிசையில் கோலி, கே.எல். ராகுலைப் பின்னுக்குத் தள்ளி இந்திய தரப்பில் முதல் வீரராக வந்துள்ளார்.
அந்தப் போட்டியில் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தரவரிசைப் பட்டியலானது அபுதாபியில் நடந்த ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே தொடரைத் தவிர்த்து கணக்கில் எடுத்துக்கொண்டது.
வரும் அக்டோபர் மாதம் டி20 ஆண்கள் உலகக்கோப்பை நடக்கவிருக்கும் வேளையில் இந்திய அணி வீரர்கள், ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்து இடங்கள் உயர்ந்து 26ஆவது இடத்திற்கும், அதே நேரத்தில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த் சிறு முன்னேற்றமும் அடைந்துள்ளனர்.
தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுகமான சூர்யகுமார், அந்தப் போட்டியில் பேட்டிங் செய்யாததால் எந்தப் புள்ளிகளையும் பெறமுடியவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் 57, 32 ரன்கள் குவித்ததன் மூலம் 66ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் பந்த் 11 இடங்கள் உயர்ந்து தரவரிசையில் 69ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.