உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி அரையிறுதிச் சுற்றோடு சொந்த நாட்டிற்கு நடையைக் கட்டியது. இதில் இருந்தே, அணியின் தோல்வி, தோனியின் ஓய்வு, பயிற்சியாளரை மாற்ற வேண்டும் போன்ற பல்வேறு விவதாங்கள் அணியைச் சுற்றி வந்தன.
தற்போது அந்த வரிசையில் அணியின் கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக புதிய பிரச்னை உலா வந்துக்கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியை அன்ஃபாலோ செய்ததையடுத்து, இருவருக்கும் இடையே பிரச்னை இருப்பது வெட்டவெளிச்சமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. பொதுவாக, இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கும் முன் அணியின் கேப்டன் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன், கோலி செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார் என முதலில் கூறப்பட்டது.
இந்த சமயத்தில் கோலி - ரோஹித் இருவருக்கும் பிரச்னை இருந்தால் அது அணியைதான் பாதிக்கும் என்பதே நிதர்சனம். இதனால், இன்று மும்பையில் நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி பங்கேற்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில், ரோஹித் ஷர்மா உடன் இருக்கும் பிரச்னை குறித்து கோலியிடம் கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு கோலியின் பதில் என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் வீரர்கள் தங்களது மனைவியுடன் 15 நாட்கள் மட்டுமே தங்க பிசிசிஐ அனுமதி அளித்தது. ஆனால், இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மா தனது மனைவி, குழந்தையுடன் தொடர் முழுவதும் தங்க வைத்துள்ளார். இது குறித்து கோலி ரோஹித்திடம் விசாரிக்கவே, இருவரது நடப்புக்குள் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக, உலகக்கோப்பை தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கோலி, பும்ரா இருவருக்கும் ஓய்வு வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனால், உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு கோலியின் மோசமான கேப்டன்சியும் காரணம் என கூறப்பட்டது. இதனால், கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா ஒருநாள், டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற பேச்சுகளும் அடிப்பட்டதை இங்கு நினைவுகூற வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்திய அணியில் கங்குலி - கிரேக் சேப்பல், கோலி - கும்ப்ளே என கேப்டன், பயிற்சியாளர் இடையே நிலவிய பனிப்போர் இந்திய அணியை பெரிதும் பாதித்தது. அதுபோல கோலி - ரோஹித் இருவருக்கும் முரண் நீடித்தால், அது அணியின் வளர்ச்சிக்குதான் பெரிய பாதிப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.