புனேவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து 254 ரன்களை அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். 10 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் கோலி ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கம்பேக் தந்தார். மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி சொதப்பினார். இதனால், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் கோலியை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
தற்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டி முடிந்த பிறகு ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அதேசமயம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி 254 ரன்கள் அடித்ததன் மூலம், இப்பட்டியலில் 20 புள்ளிகளைப் பெற்று தற்போது 936 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இதனால், முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்துக்கும் இவருக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம் என்பதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து மீண்டும் முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியல்:
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 937 புள்ளிகள்
- விராட் கோலி (இந்தியா) - 936 புள்ளிகள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 878 புள்ளிகள்
- புஜாரா (இந்தியா) - 817 புள்ளிகள்
- ஹென்றி நிகோலஸ் (நியூசிலாந்து) - 749 புள்ளிகள்