உலகக்கோப்பை டி20 தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடரின் முதல் சீசனிலேயே இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அந்த தொடரில்தான் முதன்முறையாக கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் இளம் கேப்டனாக இருந்தாலும் தனது முதல் தொடரிலிலேயே சாம்பியன் என்னும் பட்டத்தை இந்திய அணிக்கு பெற்றுத்தந்தார்.
அதன்பின் தோனி கேப்டனாகவும், ஒரு வீரராகவும் இந்திய அணியை எவ்வாறு வலிமைப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் அந்தத் தொடருக்குப் பின் ஐந்து டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியால் மீண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்தியா 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று இலங்கையிடம் அடிவாங்கியது. அதன்பின் 2016ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் அரையிறுதி வரை முன்னேறியும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இதற்கிடையே நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் அடுத்த உலகக்கோப்பை டி20 தொடர் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் விளையாட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் நேரடியாக பங்குபெற்றுள்ளன. அவைத் தவிர்த்து மேலும் ஆறு அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்த தகுதிச் சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்த கருத்துக்களை ஐசிசியின் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. விராட் கோலி, அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்திலேயே தோனி தலைமையிலான இந்திய அணி முதல் டி20 கோப்பையை கைப்பற்றியது.