சச்சின் பாதையில் கோலி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பின், தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் கோலி, சச்சின் பாதையிலேயே பயணித்து பல்வேறு சாதனைகளை தனதாக்கிவருகிறார்.
சாதனை மன்னர்களை (சச்சின் - கோலி ) இணைத்த ஒரு சாதனை
தற்போது ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், சிறப்பாக பேட்டிங் செய்த கோலி டெஸ்ட் போட்டியில் தனது 27ஆவது சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம், சச்சின் - கோலி இருவரையும் ஒரு சாதனை இணைத்துள்ளது. அதாவது டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 27 சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் இருவரும் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இச்சாதனையை எட்ட இருவருக்கும் 141 இன்னிங்ஸ் தேவைப்பட்டதுதான் இதன் சிறப்பம்சமே.
ஹர்ஷா போக்லேவின் ட்வீட்!
கோலியின் மற்றொரு சிறப்பான சதம் (27). சச்சின் 27 டெஸ்ட் சதங்களை அடிக்க எடுத்துகொண்ட அதே எண்ணிக்கையிலான இன்னிங்ஸில்தான் கோலியும் தனது 27 சதங்களை அடித்துள்ளார். சச்சினின் பாதையை கோலி பின்பற்றிவிருகிறார் என பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ட்வீட் செய்துள்ளார். சச்சினின் பேட்டிங்கைப் பார்த்து கிரிக்கெட் விளையாடிய பல இந்திய வீரர்களில் கோலியும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.
முதல் இடத்தில் டான் பிராட்மேன்
டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 27 சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 70 இன்னிங்ஸ்களிலேயே இச்சாதனையை படைத்து அசைக்க முடியாத வகையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.