இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர் இம்ருல் கைஸை 4 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரும் உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்ஃபிகுர் ரஹீமும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஷமியின் பந்தில் டக் அவுட்டானார்.
இதன், மூலம் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து அனைந்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 24 ரன்களிலும், மயங்க் அகர்வால் 14 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தாலும் அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலியும், புஜாராவும் தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த போட்ட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 40 ரன்களை கடந்த போது, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 5000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே போல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த உலகின் ஆறாவது கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
பின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி 59 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 23 ரன்களுடனும் களத்திலுள்ளனர். வங்கதேச அணி சார்பில் ஹொசைன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட் - இஷாந்த் வேகத்தில் சுக்குநூறான வங்கதேசம்