தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி டூட்டி பாட்ரியாட்ஸை எதிர்கொண்டது. இப்போட்டியின் மூலம், உலகக்கோப்பையில் காயம் காரணமாக விலகிய விஜய் சங்கர், சேப்பாக் அணிக்காக அறிமுகமானார். இதில், மூன்று ரன்கள் மட்டுமே அடித்து பேட்டிங்கில் ஏமாற்றிய அவர் பந்துவீச்சில் அசத்தினார்.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து, 128 ரன்கள் இலக்குடன் ஆடிய டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்கு முதல் ஓவரை விஜய் சங்கர் வீசினார். தனது முதல் பந்திலேயே டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஆகாஷ் சிவனின் விக்கெட்டை வீழ்த்தினார். முன்னதாக, தனது முதல் உலகக்கோப்பையின் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே பாகிஸ்தான் வீரர் இமாம் - உல்- ஹக்கின் விக்கெட்டை எடுத்திருந்தார்.