இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
இதில் இன்று நடைபெற்ற ஐந்தாம் சுற்று போட்டியில் மும்பை அணி - ஹிமாச்சல பிரதேசம் அணியுடன் மோதியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ஆதித்யா டாரே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவ் 91 ரன்களிலும், ஆதித்யா டாரே 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 57 பந்துகளை எதிர்கொண்ட தாக்கூர் 6 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.