தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஓய்வு அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, தான் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வெர்னான் ஃபிலாண்டர் அறிவித்துள்ளார்.

Vernon Philander
Vernon Philander

By

Published : Dec 23, 2019, 10:15 PM IST

ஜாம்பவான்கள் வருகை

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. சமீபநாட்களாக மோசமான ஃபார்மிலிருந்த தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் பழைய வின்னிங் ஃபார்மிற்கு திரும்ப பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

வெர்னான் ஃபிலாண்டர்

அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான்களான கிரேம் ஸ்மித் அந்த அணியின் இடைக்கால இயக்குநராகவும், மார்க் பவுச்சர் பயிற்சியாளராகவும் ஜாக் காலிஸ் பேட்டிங் ஆலோசகராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களது வருகையால் தென் ஆப்பிரிக்க அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெர்னான் பிலாண்டர் ஓய்வு

ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் அனுபவ வீரர்களான டி வில்லியர்ஸ், ஆம்லா, ஸ்டெயின் (டெஸ்ட்) ஆகியோர் ஓய்வுபெற அவர்களது வெற்றியிடம் காலியாக உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்குப் பின், தான் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான வெர்னான் பிலாண்டர் அறிவித்துள்ளார்.

வெர்னான் ஃபிலாண்டர்

தனது லைன் அண்ட் லென்த் மூலம் எதிரணிகளின் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தக்கூடியவர் பிலாண்டர். 2007இல் இவர் அயர்லாந்துக்கு எதிரான போட்டி மூலம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானாலும் 2011-12 ஆண்டுகளில் தான் விளையாடிய முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளிலேயே 51 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார்.

34 வயதான இவர் இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளும், 30 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளும், 7 டி20 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல டெஸ்ட்டில் 1619 ரன்களும் ஒருநாள் போட்டியில் 151 ரன்களும் என மொத்தம் 1784 ரன்களை எடுத்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் சிறந்த வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியது தனக்கு கிடைத்த மரியாதை, பெருமை என பிலாண்டர் நெகிழ்ச்சியுடன் கூறினார். தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க:இந்திய பவுலர்களே சிறந்தவர்கள் - ஸ்டெயின்

ABOUT THE AUTHOR

...view details