சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான உரிமத்தை அமெரிக்கா கடந்த ஆண்டு பெற்றது. இருப்பினும் அந்த அணி இதுநாள்வரை பெரிய அளவிலான வெற்றி கணக்கையும் இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அந்த அணியின் தலைமை செயல் அலுவலர் ஹிக்கின்ஸ் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமெரிக்காவில் சர்வதேச போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ளதால் அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்யவுள்ளோம். மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறுவதால் போட்டி அமைப்புகளுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் ஐசிசி டி-20 உலக கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்த முன்வர வேண்டும். எங்களிடம் தற்போது ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச மைதானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அதேசமயம் கடந்த இரு உலக கோப்பை போட்டிகளை காண, அமெரிக்காவிலிருந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், அவர்களின் கிரிக்கெட் ஆர்வம் உங்களுக்கு தெரியவரும்” என்றார்.