பொதுவாக, பேட்டிங்கில் டெய்லெண்டர்ஸ்கள் களமிறங்கியவுடனே அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டால், பலருக்கும் ஆச்சரியமாகதான் இருக்கும். பந்தை வீசுவதில் செலுத்தும் வேகம் சில சமயங்களில் அவர்களது பேட்டிங்கிலும் பிரதிபலிக்கும்.
அந்தவகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் அவர் ஓடி எடுத்த ரன் ஒன்றுதான். மற்ற 30 ரன்களையும் அவர் ஐந்து சிக்சர்கள் மூலம்தான் எடுத்தார்.
குறிப்பாக, ஜடேஜா அவுட்டான பிறகுதான் களமிறங்கிய உமேஷ் யாதவ், தான் சந்தித்த முதலிரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லின்டே வீசிய 114ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை மிட் விக்கெட் திசையிலும், பின் அதே ஓவரின் கடைசி பந்தை லாங் ஆன் திசையிலும் சிக்சர் அடித்தார்.