பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் உமர் அக்மல். இவர் மீது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்), டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஃபசல், உமர் அக்மல் மீதான சூதாட்டம் குறித்தான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவர் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அக்மல் தனது தடையை நீக்கக்கோரி விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை, கடந்த ஜூலை 29ஆம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஃபாகிர் முஹம்மது கோகர் விசாரித்து, அக்மலின் தடை காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உமர் அக்மல், மீண்டும் தன்மீதான தடை காலத்தை முற்றிலுமாக நீக்கக் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து அக்மலின் வழக்கறிஞர் கவாஜா உமைஸ் கூறுகையில், “அக்மல் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க கூடிய வங்கி பரிவர்த்தனை, சாட்சியங்கள் போன்ற எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை. மேலும் இது ஒரு செல்போன் அழைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடுக்கப்பட்ட வழக்காகும். நடுவர் நீதிமன்ற உத்தரவின் எங்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. அதனால் அக்மல் மீதான தடைக்காலத்தை முழுவதுமாக நீக்கக் கோரி மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிபிஎல் 2020: தொடக்க போட்டியில் அசத்திய நரைன், ரஷீத் கான்!