பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் உமர் அக்மல். இவர் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்(பிஎஸ்எல்) டி20 தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவினரின் அறிக்கையில், "ஆட்டத்தின்போது சூதாட்டத்தில் ஈடுபடவைக்க, அடையாளம் தெரியாத நபர் தன்னை அணுகிய விஷயத்தை உமர் அக்மல் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் தெரிவிக்கவில்லை.
மேலும், விசாரணையின் முடிவில் உமர் அக்மல் தவறு செய்தது உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் முதல் ஆயுட்கால தடைவரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்மல் வருகிற 31ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கும்படியும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அக்மல், கடந்த பிப்ரவரி மாதம் லாகூரில் நடைபெற்ற பிசிபியின் உடற்தகுதி பரிசோதனையின்போது, அலுவலரைத் தவறாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிசிசிஐயை வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர்