தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2020, 2:21 PM IST

ETV Bharat / sports

யு-19 உலகக்கோப்பை : தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்த ஆப்கானிஸ்தான்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

South Africa U19 vs Afghanistan U19
South Africa U19 vs Afghanistan U19

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று கோலகலமாக தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகின்றன.

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்

இந்நிலையில், நேற்று கிம்பேர்லி நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பெற்ற தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஃபிக்குல்லாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலை குலைந்தது. இறுதியில் அந்த அணி 29.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பார்ன்சன்ஸ் 40, கெரால்டு கோட்ஸி 38 ரன்கள் அடித்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சஃபிக்குல்லா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து, 130 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 25 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் இம்ரான் மிர் 57 ரன்களிலும், இப்ராஹிம் சட்ரான் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால், ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாதசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சஃபிக்குல்லா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஆட்டநாயகன் விருதை பெற்ற சஃபிக்குல்லா

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் நான்கு குரூப் சுற்றுப் போட்டிகளில் வங்கதேசம் - ஜிம்பாப்வே, நியூசிலாந்து - ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் - கனடா, ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இத்தொடரில் நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய அணி தனது முதல் போட்டியில் களமிறங்கவுள்ளது.

இதையும் படிங்க:முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details