தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இனியும் நாங்கள் கத்துக்குட்டிகள் இல்லை; மற்ற அணிகளை மிரட்டும் வங்கதேசம்

யு19 உலகக் கோப்பை வரலாற்றில் வங்கதேச அணி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதை பலரும் வங்கதேசத்தின் அதிர்ஷ்டத்தால் நடந்தது என கருதுகிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தால் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. சிறப்பான ஆட்டத்தாலும், முழுமையான ஆதிக்கத்தாலும்தான் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

U19 world cup - Bangladesh road to finalsU19 world cup - Bangladesh road to finals
U19 world cup - Bangladesh road to finals

By

Published : Feb 8, 2020, 5:10 PM IST

கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக இருந்த வங்கதேச அணி தற்போது பல ஜாம்பவான் அணிகளுக்கும் சவால் தரும்வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்தான். அதற்கு ஷகிப்-அல்-ஹசன், மகமதுல்லா ஆகியோரது பங்களிப்பு அளப்பரியது. இவ்விரு வீரர்களுக்கு மட்டுமின்றி வங்கதேச அணியின் கிரிக்கெட்டிற்கும் இந்த தொடர் மறக்க முடியாத தொடராக அமைந்தது.

அதிலும், பேட்டிங்கில் இரண்டு சதங்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட ரன்கள், பவுலிங்கில் 11 விக்கெட்டுகள் என அந்தத் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஷகிப்-அல்-ஹசனுக்கு தொடர் நாயகன் அளிக்கப்படாமல் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது வேறு கதை. அந்தத் தொடரில் வங்கதேச அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் அதற்கு தகுதி வாய்ந்த அணியாகத்தான் இருந்தது என்பதே நிதர்சனம்.

சரித்திரம் படைக்க காத்திருக்கும் வங்கதேச வீரர்கள்

இதுவரை சீனயர் அளவில் மட்டுமே அதிக கவனத்தை பெற்றுவந்த வங்கதேச அணி தற்போது ஜூனியர் அளவிலும் கவனத்தை பெற தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் யு19 உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக வங்கதேச அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

வங்கதேச சீனியர் அணி 2012, 2016 ஆண்டுகளில் நடந்த ஆசிய கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்த சூழலில் தற்போது அதன் ஜூனியர் அணி உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இறுதி போட்டிக்குள் நுழைந்த மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள்

பலரும் வங்கதேச அணி அதிர்ஷ்டத்தால் இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும் என கருதுகிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தால் அந்த அணி இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை. சிறப்பான ஆட்டத்தாலும், முழுமையான ஆதிக்கத்தாலும்தான் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தற்போது வங்கதேச அணி இந்தத் தொடரில் கடந்த வந்த வெற்றி பாதை குறித்து பார்ப்போம்.

13ஆவது யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், குரூப் சி பிரிவில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகளுடன் வங்கதேச அணி இடம்பெற்றிருந்தது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் குரூப் போட்டியில் வங்கதேச அணி டி-எல் (டக்வெர்த் லூயிஸ்) முறைப்படி 130 ரன்களை 11. 2 ஓவர்களிலேயே எட்டி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

வங்கதேச வீரர்கள்

இதைத்தொடர்ந்து, ஸ்காட்லாந்து அணியை 89 ரன்களுக்குள் சுருட்டி தனது இரண்டாவது குரூப் போட்டியிலும் வங்கதேச அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார வெற்றிபெற்றது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற வேண்டிய போட்டி, மழைக் காரணமாக ரத்தானாலும் காலிறுதிச் சுற்றுக்கு வங்கதேச அணி முன்னேறியிருந்தது.

காலிறுதிச் சுற்றில் தொடரை நடத்தும் அணியான தென் ஆப்பிரிக்காவை பந்தாடி அரையிறுதிக்குள் அடியடுத்து வைத்தது வங்கதேசம். அதுவரை சேஸிங் செய்த வங்கதேச அணி அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 261 ரன்களை எடுத்தது. அதன் பின் தங்களது சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவை 157 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து வங்கதேச அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது வங்கதேசம். பலரும் நியூசிலாந்து அணியே இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்த்திருக்க, அதை தவிடிபொடியாக்கினார் வங்கதேச வீரர் மஹ்மதுல் ஹசன் ஜாய். அவரது சிறப்பான சதத்தால் வங்கதேச அணி 216 ரன்களை எட்டி கிவிஸை தோற்கடித்து நாளை இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

மஹ்மதுல் ஹசன் ஜாய்

இந்தத் தொடரில் வங்கதேச அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கிலும் எந்த வித சிரமமும் இல்லாமல் எளிதல்தான் வெற்றிபெற்றது. நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியிலும் வங்கதேச அணி நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு சவால் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்று அம்சங்களும் வலுவாக இருக்கிறது.

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்றால் வங்கதேச அணிக்கு மஹ்மதுல் ஹசன் ஜாய், தன்சித் ஹசன்,பர்விஸ் ஹோசன் ஆகியோர் இருக்கின்றனர். இதில், ஒருவர் ஆட்டமிழந்தாலும் மற்ற இரண்டு வீரர்கள் அணியின் ஸ்கோரை கவனித்துக்கொள்கின்றனர். அதேசமயம், பந்துவீச்சிலும் ரகிபுல் ஹொசைன் மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார். நான்கு போட்டிகளில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரகிபுல் ஹொசைன்

கடந்த சில ஆண்டுகளாக வங்கதேச அணி எந்த அளவிற்கு கிரிக்கெட்டில் அதீத வளர்ச்சிகள் அடைந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் அதீதமாக வளர்ந்தன. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை ஒப்பிடுகையில், வங்கதேச வாரியத்தின் உள்நாட்டு கட்டமைப்பு மிகவும் பரிதாபமான நிலையில்தான் இருக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கு பின் அணிக்கும், வாரியத்தும் இடையேயான போராட்டம், ஷகிப்பிற்கு தடை என பல்வேறு இறக்கங்களை கண்டு வந்த வங்கதேச அணிக்கு இந்த யு19 உலகக் கோப்பை தொடர் மூலம் மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. நாளை போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்றாலும், வெற்றிபெறாவிட்டாலும், இனி வங்கதேச அணியின் ஆட்டத்தையும் கிரிக்கெட் ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க தொடங்குவார்கள். அதுமட்டுமின்றி இனியும் நாங்கள் கத்துக்குட்டிகள் இல்லை எங்களிடமும் கவனம் தேவை என மீண்டுமொரு முறை மற்ற அணிகளுக்கு உரக்க சொல்லியிருக்கிறது வங்கதேச அணி.

இதையும் படிங்க:வங்கதேசத்தை விருட்சமாக்கப்போகும் ஷகிப் என்னும் விதை!

ABOUT THE AUTHOR

...view details