பே ஓவல் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இப்போட்டி முடிந்தபிறகு, டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்ற இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரின் நிறம் குறித்து சர்ச்சையாக ரசிகர் ஒருவர் கேலி செய்துள்ளார். இது குறித்து ஆர்ச்சர் தனது ட்விட்டர் பதிவில்,
"பேட்டிங்கில் எனது அணிக்காக போராடிய போது நிற வெறியால் அசிங்கப்பட்டது மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த ஒரு நபரைத் தவிர போட்டியைப் பார்க்க வந்த அனைத்து ரசிகர்களும் சிறப்பாக இருந்தனர்" என வேதனையுடன் ட்வீட் செய்தார். ஆர்ச்சருக்கு நேர்ந்த இந்த சம்பவத்திற்காக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சனும் மன்னிப்பு கேட்டனர்.
இந்நிலையில், ஆர்ச்சரை கேலி செய்து தாக்கியது இங்கிலாந்து ரசிகர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டவுரங்கா பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,
"அந்த ரசிகர் நிச்சயம் இங்கிலாந்து ரசிகராகத்தான் இருக்க முடியும். அவர் நியூசிலாந்து ரசிகராக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் போட்டியின்போது அவர் எந்த ஒரு நியூசிலாந்து வீரருக்காகவும் குரல் கொடுக்கவில்லை. அவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து தவறாக பேசியபோது அங்கிருந்த நாங்கள் அந்த ரசிகரை அப்படி பேச வேண்டாம் என்று சொல்லி, அவரை தடுத்தோம்" என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்தின் பிரபல இணையதளத்திற்கு ஆர்ச்சர் பேசுகையில், "நான் பெவிலியன் நோக்கி செல்லும் போது அந்த குறிப்பிட்ட ரசிகர் எனது நிறம் குறித்து அவமதித்தார். உடனே அங்கிருந்த மற்ற ரசிகர்கள் அவர் சொன்ன கருத்து எனக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவரை மேலே இழுத்தனர். ஆனால், அந்த ரசிகர் எனது நிறம் குறித்து பேசியது எனக்கு கேட்டது. இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து ஆழமாக பேச நான் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திலிருந்து ஆர்ச்சர் மீண்டுவந்துள்ளதாக சக இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹாமில்டனில் தொடங்கவுள்ளது.