சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதிகரித்துவருவதால், வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த கோவிட் -19 வைரஸ் பரவாமல் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக, ஏப்ரல் 15ஆம் தேதி அனைத்து சுற்றுலா நுழைவு விசாக்களையும் நிறுத்திவைத்துள்ளது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 வைரஸால் இதுவரை 539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியர்கள் யாரும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் கேட்டுக்கொண்டார்.
இதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்காட் மாரிசன் கூறுகையில், "தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிநாட்டிற்கு செல்லும் குடிமக்கள் அங்கு சிக்கலைச் சந்திக்க நேரலாம்" என்றார்.