ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 20ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் மாலன் தலைமையிலான கலந்தர்ஸ் (Qalandars) அணி, ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டேவிட் மாலன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பின் தனது ஆக்ரோஷ ஆட்டத்தினால் எதிரணியின் பந்து வீச்சாளர்களை சோதித்த பான்டன் டி10 லீக் வரலாற்றில் 17 பந்துகளில் அரை சதமடித்து புதிய சாதனையைப் படைத்தார்.
தொடர்ந்து தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்திய பான்டன் 28 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 80 ரன்களை விளாசி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சோபிக்காததால் கலந்தர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்தது.