சச்சின் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத பெயர் ஸ்டீவ் பக்னர். ஏனென்றால் இவர் நடுவராக இருந்தபோது ஏராளமான முறைகள் சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் பக்னர் பேசுகையில், ''சச்சினுக்கு இரு தருணங்களில் தவறாக அவுட் கொடுத்துள்ளேன். கிரிக்கெட் போட்டிகளின்போது நடுவர்கள் யாரும் தெரிந்தே தவறாக அவுட் கொடுக்க மாட்டார்கள். மனிதர்கள் தவறு செய்வது சாதாரண ஒன்றுதான்.
2003ஆம் ஆண்டு ஜேசன் கில்லஸ்பி பந்தில் சச்சினுக்கு அவுட் கொடுத்தேன். ஆனால், அப்போது பந்து அவருக்கு மேலே சென்றது. அதேபோல் இன்னொரு முறை ஈடன் கார்டன் மைதானத்தில் பல்லாரயிரக்கணக்கான ரசிகர்களின் சத்தத்தில் நான் தவறு செய்துவிட்டேன். சச்சின் பேட்டில் படாமல் கீப்பர் பிடித்த பந்திற்கு அவுட் கொடுத்தேன்.
இப்போதைய நடுவர்கள் தொழில்நுட்பங்கள் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கின்றனர். தங்களது முடிவுகளைக் களத்திலேயே மாற்ற முடிகிறது. முன்பெல்லாம் நான் தவறாக அவுட் கொடுத்துவிட்டால், இரவில் எனக்குத் தூக்கமே வராது. எனது தவறுகளால் நான் பல இரவுகளைத் தொலைத்துள்ளேன்'' என்றார்.