சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் போதுமான வாய்ப்பின்றி இருக்கும் வீரர்கள் தங்களது அணியிலிருந்து விலகி, மற்ற நாடுகளுக்காக விளையாடுவது வழக்கம்தான். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இயான் மோர்கன். தனது ஆரம்பக் காலத்தில் அயர்லாந்து அணிக்காக விளையாடிய இவர், தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிவருகிறார்.
தற்போது அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் டேன் பீட் இணையவுள்ளார். கடந்தாண்டு அமெரிக்க அணிக்கு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான அந்தஸ்து கிடைத்தது. இதனால், தான் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவுக்காக அவர் தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகி அமெரிக்க அணியில் விளையாட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக 2014இல் அறிமுகமான இவர், இதுவரை ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஷாம்சி, கேஷவ் மகராஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருதால் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். இதைக் கருத்தில் கொண்டே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிகிறது.