டிஎன்பிஎல் லீக் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் கேப்டன் அபினவ் முகுந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் ஆடிய காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது.
பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணியில் தொடக்க வீரர்களாக ஷாரூக் கான் - கேப்டன் அபினவ் முகுந்த் இணை களமிறங்கியது.
முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி என அசத்தலாக தொடங்கிய இந்த இணை, இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரி, மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர், நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரி என அதிரடியில் மிரட்டியது. பவர் ப்ளே ஓவர்களின் முடிவில் கோவை அணி விக்கெட் இழபின்றி 79 ரன்களை எடுத்தது.
பின்னர் வீசிய 7ஆவது ஓவரில் ஷாரூக் கான் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த ரஞ்சன் பவுல் 1 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றினார். பின்னர் அனிருத் - அபினவ் இணை கூட்டணி அமைத்து காஞ்சி அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.
சிறப்பாக ஆடிய அபினவ் முகுந்த் அரைசதம் கடந்தார். இந்த இணையை எதிர்த்து காஞ்சி அணி விக்கெட் வீழ்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக கோவை அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய அபினவ் முகுந்த் 70 ரன்களும், அனிருத் 22 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். ஆட்டநாயகனாக அபினவ் முகுந்த் தேர்வு செய்யப்பட்டார்.