ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். 1989ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை 24 வருடங்களில் அவர் பேட்டிங்கில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார்.
அதேசமயம் நடுவர்களின் தவறான தீர்ப்பினால் அவர் அதிகமுறை அவுட்டாகியும் உள்ளார். அதிலும் குறிப்பாக 90 ரன்களை கடந்தபோதுதான் அவருக்கு தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் அவர் சில சாதனைகளை தவறவிட்டது மட்டுமின்றி குறிப்பிட்ட சில சாதனைகளை தாமதமாக படைத்துள்ளார். அப்படியான ஒரு சம்பவம்தான் 2011 ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 100ஆவது சதத்தின் சாதனையை எதிர்நோக்கி அவர் 91 ரன்களை எடுத்திருந்தார். அப்போது டிம் பிரஸ்ணன் வீசிய பந்துவீச்சில் டெண்டுல்கர் எல்பிடபள்யூ முறையில் அவுட் என நடுவர் ராட் டக்கர் தீர்ப்பு வழங்கினார். ரீப்பேளவில் பந்து லெக் ஸ்டெம்ப்பை லேசாக தட்டியது தெரியவந்தது.
இந்நிலையில் அப்போட்டியில் சச்சினின் 100ஆவது சதத்தின் சாதனையை தடுத்து நிறுத்தியதால் தனக்கும் நடுவர் ராட் டக்கருக்கும் கொலை மிரட்டல் வந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் பிரஸ்னன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நினைவுகூர்ந்த அவர், "அப்போது சச்சின் டெண்டுல்கர் 99 சதங்களை விளாசியிருந்தார். டிஆர்எஸ் (நடுவரின் தீர்ப்பை சரி பார்க்கும் முறை) மீது பிசிசிஐக்கு பெரியளவில் ஈடுபாடு இல்லாததால் அந்த டெஸ்ட் தொடரில் டிஆர்எஸ் வசதி இல்லை.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அவர் 91 ரன்கள் எடுத்திருந்தபோது எனது பந்து வீச்சில் எல்பிடபள்யூ முறையில் அவுட் ஆனார். பந்து லெக் ஸ்டெம்ப்பை அடிக்காமல் மிஸ் செய்ய அதிக வாய்ப்பு இருந்தது. இருப்பினும் நடுவர் ராட் டக்கர் (ஆஸ்திரேலியர்) அவுட் என தீர்ப்பு வழங்கினார்.
அதனால் நாங்களும் அப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்தை பெற்றோம்.
ஒருவேளை அப்போட்டியில் ராட் டக்கர் அந்தத் தீர்ப்பை வழங்காமல் இருந்திருந்தால் அப்போதே சச்சின் சதம் அடித்து அந்தச் சாதனையை (100ஆவது சதம்) படைத்திருப்பார்.
அந்தச் சாதனையை நாங்கள் தடுத்ததால் ஓவல் டெஸ்ட் போட்டி முடிந்த சில நாள்களுக்குப் பிறகு எனக்கும், ராட் டக்கருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. எனக்கு ட்விட்டரிலும், அவருக்கு கடிதத்தின் மூலமும் கொலை மிரட்டல் வந்தது. சில மாதங்களுக்கு பிறகு நான் அவரை மீண்டும் சந்திக்கையில், எனக்கான தனிப்பட்ட ஒரு பாதுகாவலரை நியமிக்க வேண்டும்போல என அவர் தெரிவித்தார்" என்றார்.
சச்சின் அப்போட்டியில் சாதனையை தவறவிட்டாலும் பிறகு 2012ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் அச்சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.