INDvsBAN: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது.
இதில் இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இப்போட்டியை காண வங்கதேச பிரதமரான ஷேக் ஹசினா நேரில் வரவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 60,000 பேர் வரை அமரக்கூடிய ஈடன் கார்டன்ஸ் மைதானதில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது போட்டிக்கான டிக்கெட் விலையை குறைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானம் இதுகுறித்து கொல்கத்தா கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளரான அபிஷேக் டால்மியா கூறுகையில், ‘ஈடன் கார்டனில் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியாக போட்டிக்கான டிக்கெட் விலையை குறைப்பதற்கான தீர்மானம் நேற்று கையெழுத்தானது. இதற்கு முன் 200, 150, 100 ஆகிய விலையில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் இனி 150, 100, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்தியாவுடனான தொடர் நடக்குமா என்ற சூழ்நிலையில், கங்குலி நிச்சயமாக இத்தொடர் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெஸ்ட் மீது தெ. ஆப்பிரிக்கா கவனம் செலுத்தும் நேரம் இது - இங்கிலாந்து முன்னாள் கேப்டனின் அக்கறை