2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், குரூப் ஏ, பி பிரிவுகளில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டி கான்பூரில் நடைபெற்றது. மழையால் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 180 ரன்களும், உத்தரப் பிரதேச அணி 175 ரன்களும் எடுத்தனர்.
இதனால், ஐந்து ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய தமிழ்நாடு அணி உத்தரப் பிரதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 54.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 53 ரன்கள் அடித்தார். உத்தரப் பிரதேச அணி சார்பில் சவுரப் குமார் ஐந்து, அன்கீத் ராஜ்பூட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உத்தரப் பிரதேச அணி 7.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்தபோது ஆட்டத்தின் கடைசி நாளான நான்காவது ஆட்டநாள் முடிவுக்கு வந்தது. இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி டிராவில் முடிந்தது. ரிங்கு சிங் 27 ரன்களிலும், முகமது சைஃப் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர்.