கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 14ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்கள் இப்பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதை உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டிகளுடன் ஒப்பிட்டு செயல்படுங்கள் என காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சாஸ்திரியின் ட்விட்டர் காணொலியில், "இன்றைய தேதியில் கோவிட்-19 பெருந்தொற்று நம்மை பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. இப்பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு சமம். இதில் வெற்றி பெற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்தால் மட்டுமே வெற்றியை அடைய முடிவும்.
இப்பெருந்தொற்று நாம் விளையாடும் மற்ற உலகக்கோப்பை போல் அல்ல. மாறாக அனைத்து உலகக்கோப்பைக்கும் இது தாய். இதில் 11 பேர் மட்டும் போராடவில்லை. 1.4 பில்லியன் மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மனித குலத்தின் உலகக்கோப்பையை வென்று காட்டுவோம்.
இதில் நாம் வெற்றி பெறுவோம், ஆனால் அடிப்படைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். நம் பிரதமர் முன்னிலை வகித்து வழிநடத்துகிறார். அரசிடமிருந்து வரும் உத்தரவுகளை நாம் அனைவரும் ஏற்று நடக்க வேண்டும். அது மத்திய அரசாக இருக்கலாம், மாநில அரசாக இருக்கலாம் அல்லது தங்கள் உயிரை பணயம் வைத்து போராடும் மக்களிடமிருந்து வரும் உத்தரவாக இருக்கலாம். அவர்களின் உத்தரவிற்கு ஏற்றவாறு நாம் பணிய வேண்டும்.
இதில் இரண்டு உத்தரவுகள் கடினமானது. ஒன்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மற்றொன்று சமூக விலகலை கடைபிடிப்பதாகும். ஆனால் இதில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த வலியை கடந்தால் மட்டுமே சாத்தியமாகும், இதன் மூலமே கோவிட்-19 பெருந்தொற்று சங்கிலியை உடைக்க முடியும்", என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தோனி போன்ற ஒருவருக்கு பந்துவீச கற்றுக்கொள்ளுங்கள் - கோரி ஆண்டர்சன்!