தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#Onthisday: ‘முல்தானின் சுல்தான்’ சேவாக்! - முல்தானின் சுல்தான்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை முற்சதங்களை விளாசிய தினம் இன்று.

This day that year: Sehwag hits two 300s four years apart
This day that year: Sehwag hits two 300s four years apart

By

Published : Mar 29, 2020, 3:57 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர், அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மென், பந்துவீச்சாளர்களுக்கு கருணை காட்டாதவர், 99 ரன்னில் இருந்தாலும் சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்யும் துணிச்சல் மிக்கவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாகத்தான் ஆட வேண்டும் என்ற போக்கை சுக்குநூறாக்கியவர், இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான விரேந்தர் சேவாக்.

அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக்

இப்படி அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்திய சேவாக், இந்திய அணியில் இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு முறை முற்சதமடிப்பதே பலராலும் முடியாத சூழ்நிலையில், நான்கு அண்டுகளில் ஓரே தினத்தன்று இருமுறை முற்சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முற்சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையும் சேவாக்கையே சேரும்.

விரேந்திர சேவாக்

2004ஆம் அண்டு மார்ச் 29ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் சோப்ராவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சேவாக் எதிரணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பவுண்டரி, சிக்சர்களாக அனுப்பினார்.

அதன் விளைவாக முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 160 ரன்களை சேர்த்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதி கலங்கவைத்தார்.

அதன்பின் சேவாக்குடன் இணைந்த சச்சினும் அன்றைய வேகப்புயல்களான சோயப் அக்தர், முகமது சமி ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்துவாங்க ரசிகர்களுக்கு இது டெஸ்ட் கிரிக்கெட்டா? இல்லை ஒருநாள் போட்டியா? என்ற சந்தேகம் வரும் அளவிற்கு ஆட்டத்தை மாற்றினர்.

சச்சின் - சேவாக்

அதிரடி காட்டிய சேவக் 100, 200 என ரன்களை குவிக்க இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது முற்சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

அதன் பின் 375 பந்துகளில் 39 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 309 ரன்களை எடுத்து இந்திய அணி சார்பில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை மட்டுமின்றி, டெஸ்டில் முற்சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.

அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 675 ரன்களைக் குவித்தது.

முதலாவது முற்சதமடித்த மகிழ்ச்சியில் சேவாக்

அதன்பின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் பாகிஸ்தான் அணிக்கெதிராக முதல் இன்னிஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் அது மாறியது.

இதனையடுத்து சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

சென்னையில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

வழக்கம் போல் சேவாக் தொடக்க வீரராக களமிறங்கி, டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டியாக மாற்றியமைத்தார்.

ஸ்டெயின், நித்தினி, மோர்கல், காலீஸ் என வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைத்து தாக்கிய சேவாக், பவுண்டரியாகவும், சிக்சர்களுமாக மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் அனுப்பினார்.

பந்தை சிக்சருக்கு விளாசும் சேவாக்

இந்தப் போட்டியில் சேவாக்கிற்கு துணை நின்றவர் தடுப்புசுவர் டிராவிட். பிறகென்ன, அதிரடியும், தடுப்பாட்டமும் ஒன்றிணைந்து களத்திலிருக்கும்போது தென்ஆப்பிரிக்க பந்துவீச்சளர்களுக்கு என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர்.

அதன்பின்னர் மார்ச் 29, 2008 ஆம் ஆண்டு, சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து 278 பந்துகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முற்சதத்தைப் பதிவு செய்து மிரட்டினார். மேலும் இதுநாள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிவேக முற்சதமாகவும் இது அமைந்தது.

சதமடித்து அசத்திய சேவாக்

தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த சேவாக் 304 பந்துகளில் 42 பவுண்டரிகள், ஐந்து சிகசர்களை பறக்கவிட்டு 319 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற தன்னுடைய சாதனையை தானே முறியடித்து புது சாதனையைப் படைத்தார்.

அதேபோல் டான் பிராட்மேன், விவி ரிட்சர்ட்சன் ஆகியோரைத் தொடர்ந்து சர்வதேச டெஸ்டில் இரு முறை முற்சதமடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இரண்டாவது முறையாக முற்சதமடித்த சேவாக்

சேவாக்கின் இது போன்ற அதிரடி ஆட்டத்தால், ஒருநாள் கிரிக்கெட்டை மட்டுமே பார்த்து வந்த கிரிக்கெட் ரசிகர்களை, டெஸ்ட் கிரிக்கெட்டையும் பார்க்கவைத்தார்.

அதன்பிறகு 2016ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி சார்பில் கரூண் நாயர் 303 ரன்களை அடித்து அசத்தினார்.

கரூண் நாயர்

அதுபோல் எத்தனை இந்தியர்கள் வேண்டுமானாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முற்சதமடித்து அசத்துவார்கள். ஆனால் சேவாக் அடித்ததைப் போன்று அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இதையும் படிங்க:கரோனாவுக்கு பாட்டெழுதிய ‘சாம்பியன்’ பிராவோ!

ABOUT THE AUTHOR

...view details