நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடர் 2017 இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் அணியாக களமிறங்கிய இந்திய அணி கோலியின் தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மறுமுனையில் இந்திய அணியின் பரம எதிரியாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (ஜூன் 18) ஓவலில் நடைபெற்றது.
முன்னதாக இந்த தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதால் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பவுலிங் செய்யத் தீர்மானித்தார். அதற்கேற்றார் போலவே இந்திய அணியும் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியது.
பும்ரா வீசிய 4ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ஃபகர் ஜமான் தோனியிடம் கேட்ச் தந்து மூன்று ரன்களில் அவுட்டானார். இந்திய ரசிகர்களும், வீரர்களும் கொண்டாட்டத்தில் மூழ்க அது நோபாலாக அறிவிக்கப்பட்டது.
பும்ராவின் இந்த நோபால் ஆட்டத்தின் போக்கை இந்தியாவிடமிருந்து முற்றிலும் பாகிஸ்தானின் பக்கம் மாற்றியது. அதுவரை சிறப்பாக இருந்த இந்திய அணியின் பவுலிங் அதன்பிறகு பலவீனமானது.
பும்ரா,புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா,அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சை ஃபகர் ஜமான் வெளுத்துக்கட்டி சதம் விளாசினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
ஃபகர் ஜமான் 101 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும் கூட முகமது ஹஃபிஸ், அசார் அலி ஆகியோரது அரை சதத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 338 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் (ரோகித்,கோலி, தவான்) விக்கெட்டுகளை முகமது ஆமீர் தனி ஒரு ஆளாக தூக்கினார்.
ஆனாலும் களத்தில் யுவராஜ் சிங் தோனி இருந்ததால் ஏதாவது ஒரு மேஜிக் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருவரும் கைவிரித்தனர். பின்னர் களமிறங்கிய கேதர் ஜாதவும் வந்த வேகத்தில் வெளியேற, ஹர்திக் பாண்டியா தனி ஒரு ஆளாக பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். குறிப்பாக ஷபாப் கானின் பந்துவீச்சில் இவர் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார்
இவரது இந்த ஆட்டம் 2003 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சேவாக் ஆடிய ஆட்டத்தை பார்ப்பதுபோல் இருந்தது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 76 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாக பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று அசத்தியது. பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்திய அணி இப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பும்ராவின் ஒரு நோ பாலைக் குறை கூறினாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2003 உலகக் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் விவகாரத்தில் கங்குலி என்ன தவறை செய்தாரோ அதை மீண்டும் கோலி 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் செய்தார் என்பதே நிதர்சனம்.