தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இதே நாள், 1983: உலகக்கோப்பை சரித்திரத்தை மாற்றிய கபில் தேவ் அணி!

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக 1983 உலகக்கோப்பையை வென்று 37 வருடங்கள் ஆகின்றன.

this-day-that-year-india-beat-west-indies-to-clinch-maiden-world-cup-title-in-1983
this-day-that-year-india-beat-west-indies-to-clinch-maiden-world-cup-title-in-1983

By

Published : Jun 25, 2020, 1:40 PM IST

1975, 1989 உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்து சுற்றுப்பயணம் என கிரிக்கெட்டின் உச்ச அணிகளை அடித்து முறுக்கேறி இருந்தது வெஸ்ட் இண்டீஸ். அந்தக் காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல வேண்டும் என்பது, மலையை மடுவாக்குவதற்கு சமம்.

ஆனால், 1983 உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. சரியாகச் சொன்னால், இந்திய அணியின் ஆக்ரோஷத்தின் முன் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்ந்தது என்று கூறலாம்.

பறவைப் பறந்து செல்வதன் அழகை எதை வைத்து அளவிட வேண்டும் என்ற கேள்விக்கு, பார்க்கும் கண்களை வைத்து அளவிட வேண்டும் என்பார்கள். அதுபோல் தான் கதைகளின் உயிரும் கண்களால் மட்டுமே அளவிட முடியும். கதையை உள்வாங்குபவர், கதையை சொல்பவர் இருவரது கண்களால் மட்டுமே கதை உயிர்ப்பெரும். கதை சொல்பவர்களுக்குள் இருக்கும் பரபரப்பு, ஆச்சரியம், வேகம் என அனைத்தும் கண்களால் மட்டுமே உள்வாங்குபவர்களுக்கு கடத்த முடியும்.

டீம் போட்டோ

1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் ஹைலைட்ஸ்களை வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதார்த்தமாக வீட்டிற்கு வந்த அப்பா கபில் தேவ் பந்துவீசுவதைப் பார்த்து இது இறுதிப்போட்டிதானே என உடன் அமர்ந்து முழு ஹைலைட்ஸையும் பார்த்தார். ஆம், இது கபில் தேவ் பெயரை கேட்கும்போதும், பார்க்கும்போதும் அந்த தலைமுறையினருக்கு கண் இமைக்கும் நேரத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இளைஞன் வந்து செல்கிறான். ஹைட்லைட்ஸ் முடிந்த பிறகு உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற கதையை அப்பா அதே இறுதிப்போட்டி பரபரப்புடன் எனக்கு கூறினார். அந்தக் கதையை இப்போது அனைவருடனும் பகிர்கிறேன்.

கிரிக்கெட்டை எதற்காக ஒவ்வொரு முறையும் பார்க்கத் துடிக்கிறோம் என்ற கேள்வி எழும்போதெல்லாம் நண்பர்களிடம் கேட்பேன். அதற்கு த்ரில், பரபரப்பு, உத்வேகம் என பல பதில்கள் வரும். உண்மையைச் சொன்னால், அதே பரபரப்பு தான் அப்பாவின் கண்களிலும் தெரிந்தது. இந்திய அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வெல்லுமா என ரசிகர்கள் ஏங்கினர். அவர்களை வென்றபின் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஏக்கம் ஆசையாக மாறியது. ஜிம்பாப்வே அணியுடன் கபில் தேவ் என்னும் அசகாய சூரனின் அனல் பரந்த ஆட்டத்தைக் கேள்விபட்ட பிறகு அதே ஆசை, பேராசையாக மாறியது. ஆனால் இறுதிப் போட்டியில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேண்டும்.

கபில் தேவ்

கைகளுக்கு எட்டும் தூரத்தில் உலகக்கோப்பை இருந்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்று தெரிந்தபோது இந்திய வீரர்கள் மனம்விட்டு போயிருந்தார்களாம். ஆனால் ஒருவர் மட்டும் உலகக்கோப்பையை வென்றபின் கொண்டாடுவதற்காக ஷாம்பைன் பாட்டீலுடன் இந்திய ட்ரெஸிங் ரூமிற்குள் நுழைந்தாராம். வேறு யாரும் அல்ல கேப்டன் கபில் தேவ் அது.

'கிரிக்கெட்டின் மெக்கா' லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்டத்தை வேகமாக முடித்துவிடலாம் என எண்ணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராபர்ட்ஸ், கார்னர், மார்ஷல், ஹோல்டிங் என மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சுக் கூட்டணியை எதிர்கொள்ள இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடை நடுங்கியபடியே களமிறங்கியது.

சுனில் கவாஸ்கர் வந்த வேகத்தில் ராபர்ஸ் வீசிய இன் ஸ்விங்கருக்கு பலியாகி வெளியேற, இந்திய ரசிகர்களின் விழிகள் இருண்டது. அணியின் சிறந்த பேட்ஸ்மேன் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்த காட்சி, ரசிகர்களின் உலகக்கோப்பைக் கனவை சுக்குநாறாக்கியது. பின்னர் தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் - அமர்நாத் இருவரும் இணைந்தனர். ஸ்ரீகாந்திற்கு ராபர்ஸின் பந்து தொல்லைக் கொடுக்க, அமர்நாத்திற்கு மார்ஷலின் பந்து பயம் கொடுத்தது. இருவரும் இதுகுறித்து களத்தில் ஆலோசித்து, ஸ்ரீகாந்த் மார்ஷலின் பந்தையும், அமர்நாத் ராபர்ட்ஸ் பந்தையும் எதிர்கொள்ள முடிவு செய்தனர். ஆம், கண்ணை மூடிக்கொண்டு ”போனால் போகட்டும் போடா” என ஸ்ரீகாந்த் விளாசியதில் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்ந்தது. கண்ணை மூடிக்கொண்டு ஆடிய ஆட்டத்தில் ஸ்ரீகாந்த 38 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து ஹோல்டிங் வீசிய இன் ஸ்விங்கரில் ஸ்டம்புகள் பறக்க அமர்நாத் 26 ரன்களில் நடையைக் கட்டினார்.

வரலாற்று புகைப்படம்

பின்னர் வந்த சந்தீப் பாட்டீல் 27, யஷ்பால் ஷர்மா 11, கபில் தேவ் 15 என கோம்ஸ் பந்தில் ஆட்டமிழக்க, உலகக்கோப்பைக் கனவை லார்ட்ஸில் காவு கொடுத்துவிட்டோமோ என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். டெய்லண்டர்களின் போராட்டத்திற்கு பிறகு, இறுதியாக இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றப்போகிறோம் என்ற ஆசையில் விண்டீஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மைதானத்தில் இந்தியா வென்றுவிடும் என்ற எண்ணம் ஒருவருக்கும் இருந்திருக்காது. ஆனால் நடந்ததோ அதிசயமே அசந்து போகும் எட்டாவது அதிசயம். உணவு இடைவேளை முடிந்து வீரர்களிடம் கேப்டன் கபில் தேவ் உரையாற்றினார்.

அந்த உரை சென்ட்டிமென்ட்டாகவோ, உணர்ச்சியின் வெளிப்பாடாகவோ இல்லை. அது போருக்கு செல்லும் முன் முகாலாய பேரரசர் பாபர் ஆற்றிய உரைக்கு சமமாக இருந்தது என ட்ரெஸ்ஸிங் ரூமில் அந்த உரையை கேட்டவர்கள் கூறினார்கள். ஆம், துவண்டு போன மனிதனுக்கு ஆறுதல் கூறும் வார்த்தைகள், வாழ்க்கையை மடைமாற்றுவதாக இருக்க வேண்டும் அணைக் கட்டாக இருக்கக் கூடாது.

இந்திய அணியின் கைகளில் உலகக்கோப்பை

இந்திய வீரர்கள் துவண்டு போனதைக் கண்ட கபில், கேப்டனாக, ஒரு போர் வீரனாக அணியை முன்நின்று அழைத்துச் சென்றார். அதன் பின்னர் மைதானத்தில் நடந்தவையெல்லாம் அதிசயம் அல்ல. கபில் தேவ் என்னும் ஆதர்ச நாயகனின் வெறித்தனமான உழைப்பு. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் வீசிய இன்-ஸ்விங்கரை கணிக்காத கார்டன் போல்டாகி வெளியேறுவார். இந்திய ரசிகர்களின் முதுகு சிறிது நிமிர்ந்தது. வீரர்களின் முதுகும்தான்.

தொடர்ந்து சர் விவியன் ரிச்சர்ட்ஸ் களமிறங்கினார். ரிச்சர்ட்ஸ் ஒரு பக்கத்தில் அதிரடியில் பொளந்துகட்ட, மதன் லால் வீசிய பந்தில் ஹெய்ன்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கேப்டன் கிளைவ் லாய்டு வர, அதிரடியாக ஆடிய ரிச்சர்ட்ஸ் மதன் வீசிய பந்தை அடிக்க முயன்று டாப் எட்ஜ் ஆக, அதனை மிஸ் செய்துவிடக்கூடாது. மிஸ் செய்துவிட்டால் உலகக் கோப்பை மிஸ் ஆகிவிடும் என்பதில் தீர்க்கமாக கபில் தேவ் அன்று ஓடிய ஓட்டத்தில் ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய ஓட்டம்.

ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை எடுத்த பிறகு சிறிது நிமிர்ந்த ரசிகர்களின் முதுகுகள் அந்த நொடி லார்ட்ஸில் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தது. அதுமட்டுமின்றி, ரசிகர்களை எழுந்து ஆரவாரம் செய்யவும் தூண்டியது. ஏனெனில் ரிச்சர்ட்ஸ் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ரிச்சர்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்த அந்த ஓவரை கபில் தேவிடமிருந்து மதன் லால், நான் வீசுகிறேன் என வலுக்கட்டாயமாக வாங்கி வீசினாராம். ஆட்டம் பரபரப்பாக இருக்கிறது. எதிரணி பந்துவீச்சாளர்களை வேட்டையாடும் வேட்டைக்காரன் ஒருவர் களத்தில் நிற்கிறார்.

அந்த சமயத்தில் மிதவேக பந்துவீச்சாளர் ஒருவர் வந்து வலுக்கட்டாயமாக கேப்டனிடம் இருந்து நான் தான் வீசுவேன் என பந்தை பிடுங்கினால் எந்த கேப்டனும் அவரை திட்டவோ, அலட்சியப்படுத்தவோ வாய்ப்புண்டு. ஆனால், கபில் மட்டும்தான் நம்பிக்கையாக பேசுபவனிடம் பந்தை கொடுக்கலாம் என எண்ணி அதனை செயல்படுத்தினார். அங்குதான் கபில் தேவ் கேப்டனாக நிமிர்ந்து நின்றார். வேட்டைக்காரனை மூட்டைக் கட்டி அனுப்பியாகிவிட்டது. பின்னர் வந்த கோம்ஸ் 5, லாய்டு 8 என விக்கெட்டுகள் சரிய, இந்திய ரசிகர்கள் கடவுளை வேண்ட, கபிலோ உழைப்பை வேண்டினார்.

பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ஜெஃப் டுஜன் - மார்ஷல் இணை சிறிது நேரம் தாக்கு பிடித்து ரன்களை சேர்க்க, அமர்நாத் வந்து அந்த ஜோடி செய்து கொண்டிருந்த வேலையை முடித்துவைத்தார். பின்னர் ராபர்ட்ஸை கபில் தேவ் வீழ்த்த, ஹோல்டிங் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து இந்தியா வென்றவுடன் ரசிகர்கள் முதல்முறையாக வெற்றி பெற்ற பூரிப்புடன் லார்ட்ஸ் அதிர மைதானத்திற்குள் ஓடினர். வீரர்களோ பெவிலியன் நோக்கி ஓடினர்.

ஆம், கடந்த இரண்டு உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் பேரரசனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி வீழ்த்தி முதன்முதலாக அரசனாக முடிசூடிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

மைதானத்திற்குள் புகுந்த ரசிகர்கள்

சில நாட்களுக்கு முன்னதாக உலகக்கோப்பையை வெல்வோம் என தங்களாலேயே நம்ப முடியாத இந்திய வீரர்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்டனர். எந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் கண்டு சர்வதேச கிரிக்கெட் மிரண்டதோ, அதே வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திவிட்டது. அந்த ஒரு வெற்றிதான் இன்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பை முதன்முதலில் நிமிரச் செய்தது கபில் தேவ் என்னும் கேப்டன்.

பெரிய அணிகள் மட்டுமே வெல்ல முடியும் என நினைத்த உலகக்கோப்பையை சிறிய அணியான இந்தியா கைப்பற்றியது. அதுவும் லார்ட்ஸில். அதன் பின்னர்தான், மற்ற அணிகளும் உலகக்கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

அந்த வகையில் இன்று பல கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதுக்கு விதை கபில் போட்டது. உலகக்கோப்பையை பெற்றுவிட்டு கபில் இப்படி கூறினார். “ஒவ்வொரு வீரரும் சிறப்பாக ஆடினோம். உலகக்கோப்பையைக் கடந்து வாழ்க்கைக்காகவும் ஓடினோம்” என பேசியுள்ளார்.

ஆம்... இந்திய கிரிக்கெட்டின் உயிர் உருவானது அந்த ஒரு போட்டியில்தான். இந்திய கிரிக்கெட்டின் வாழ்க்கை தொடங்கியது அந்த ஒரு போட்டியிலிருந்துதான். கபில் தேவ் என்னும் நாயகனின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் கனவும் நனவானது அந்த ஒரு போட்டியால்தான்'' என அப்பாவின் கதை முடிந்தது. இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்று இன்றோடு 37 வருடங்கள் ஆகிறது என்ற செய்தியைப் பார்த்தவுடன் அப்பாவின் கதையும், கபில் பற்றி பேசிய கண்களும் தான் நினைவுக்கு வந்தது.

இதையும் படிங்க: தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...!

ABOUT THE AUTHOR

...view details