இலங்கையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடர் வங்கதேச அணிக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் விஸ்வரூபமெடுத்த வங்கதேச அணி, லீக் சுற்றில் இலங்கையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இலங்கையை வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடி இலங்கை வீரர்களையும், ரசிகர்களையும் வெறுப்படையச் செய்தனர். இதையடுத்து மார்ச் 18ஆம் தேதி கொழும்புவில் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவு தந்தனர்.
168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், களமிறங்கிய தினேஷ் கார்ததிக் ருபேல் ஹொசைன் வீசிய 19ஆவது ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும், பின் மூன்றாவது பந்தில் மீண்டும் சிக்சரும் என தினேஷ் கார்த்திக் வெளுத்துக் கட்டினார். அந்த ஓவரில் அவர் 22 ரன்களைச் சேர்த்தால் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்தது.