கிரிக்கெட்டில் இந்த வீரருக்கு இருக்கும் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் சிறந்த வீரராக மாறியிருப்பார் என்ற பேச்சு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு கேப்டனின் முதல்கடமையே ஒரு வீரரின் திறமையை நன்கு அறிந்து, அவருக்கு சரியான இடத்தில் வாய்ப்பை வழங்கி சிறந்த வீரராக மாற்றவைப்பதுதான்.
அப்படி 1990களின் ஆரம்பக் கட்டத்தில் நல்ல பேட்ஸ்மேனாக அறியப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் பெரும்பாலும் ஐந்தாவது அல்லது ஆறாவது வரிசையில் மட்டுமே பேட் செய்துவந்தார். இருப்பினும் ஓப்பனிங்கிள் களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்து விளையாட வேண்டும் என்ற விருப்பும் அவருக்கு நீண்ட நாள்களாகவே இருந்தது.
தனக்கான வாய்ப்புக்காக அவர் பலமுறை அணி நிர்வாக்கத்திற்கு முன் நின்றுள்ளார். அப்படியும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டே இருந்தாலும், சச்சின் விடவில்லை. இந்த ஒருமுறை எனக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை தாருங்கள். நான் சொதப்பினால் மீண்டும் உங்கள் முன் வந்து நிற்க மாட்டேன் என சச்சின் தெரிவித்திருந்தார்.
அஜய் ஜடேஜாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கிய சச்சின் சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் (மார்ச் 26), 1994 ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக அஜய் ஜடேஜாவுடன் சச்சினுக்கு ஓப்பனிங்கில் களமிறங்க முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது.
திறமையுள்ள எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் தனது கிரிக்கெட் பயணத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல ஒரு ஸ்பெஷலான இன்னிங்ஸ் நிச்சயம் தேவைப்படும். 26 ஆண்டுகளுக்கு முன்பு அதுபோன்று ஒரு இன்னிங்ஸ்தான் சச்சினுக்கு அமைந்தது. முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய சச்சின் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேசமயம் இந்திய அணி அப்போட்டியில் தோல்வியும் அடைந்திருந்தது.
இதனால் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது மட்டுமல்லாமல் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற பொறுப்பு சச்சினுக்கு அன்று அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இதையடுத்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் அஜய் ஜடேஜாவுடன் சச்சின் தொடக்க வீரராக களமிறங்கினார்.
இதையும் படிங்க:கடவுளின் வரிசையில் இணைந்த வில்லியம்சன்
ஓப்பனிங்கில் அதுவரை கிரிக்கெட்டில் யாரும் பார்த்திடாத ஒரு அதிரடி ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் பார்க்கச் செய்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டேனி மோரிசன், கிறிஸ் பிரிங்கில், கிறிஸ் ஹாரிஸ் ஆகியோரது பந்துவீச்சை சச்சின் கட் ஷாட், லாஃப்டெட் ஷாட், ஸ்ட்ரைட் டிரைவ் ஷாட்டுகளை வெளுத்துக்காட்டினார். ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஏற்றவாறு அவரது மணிக்கட்டும், ஃபுட் ஒர்க்கும் மிக நேர்த்தியாகவே இருந்தது.
சச்சினின் அதிரடி ஆட்டத்தை நியூசிலாந்து வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரோ தனது 34ஆவது பந்தில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 13 ஸ்கோரிங் ஷாட்டுகளுடன் அரைசதம் கடந்தார். அதன்பின்னரும் அவரது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தில் பவுண்டரிகள் பறந்தன. சச்சினின் ஆட்டத்தைக் கண்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷமிட்டனர்.
சச்சின் போன வேகத்தில் பார்த்தால் நிச்சயம் ஆட்டம் 20 ஓவர்களுக்குள் முடிந்துவிடும் என்றுதான் ரசிகர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் தோன்றியது. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் வேகமாக சதம் அடித்த இந்திய வீரர் அசாருதீனின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பும் அவரது பேட்டுக்கு முன் இருந்தது. அசாருதீன் இந்த சாதனையை 62 பந்துகளில் எட்ட, சச்சின் அப்போது 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். இந்த தருணத்தில் சச்சின் மேத்யூ ஹார்ட் பந்துவீச்சில் அவரிடம் கேட்ச் தந்து 82 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 17 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை எடுத்திருந்தது.
அதில் 15 பவுண்டரிகளையும் இரண்டு சிக்சர்களையும் விளாசி ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் வந்துவிட்டதை மற்ற அணிகளுக்கு உணர்த்தினார். சச்சினின் அதிரடியால் இந்திய அணி அப்போட்டியில் வெற்றிபெற்றது. ஒருவேளை சச்சினுக்கு மட்டும் ஓப்பனிங் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் அவரும் இந்திய அணியில் பத்தோடு 11 வீரராக இருந்திருப்பார்.
சச்சினை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மாற்றியது குறித்து அசாருதீன் கூறிய வார்த்தைகள் இவை: "சிறிது நாள்களுக்கு பிறகு அவரை (சச்சின் டெண்டுல்கர்) ஓப்பனிங்கில் களமிறக்கச் சொல்லலாம் என நினைத்தேன். ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் களமிறங்கி அவர் 30, 40 அல்லது 50 ரன்களை அடித்துவந்தார். ஆனால், சச்சின் போன்ற அட்டாக்கிங் பேட்ஸ்மேனின் திறமையை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறோமோ என நினைத்தேன். என்னை பொறுத்தவரையில் இந்திய அணியில் அவர் தான் நெம்பர் 1 முதல் பேட்ஸ்மேன். அதனால் தான் அவரை ஓப்பனிங்கில் பிரமோட் செய்தேன்" என்றார்.
தனக்கான வாய்ப்புக்காக சச்சின் போராடியதும், அதற்கு அசாருதீன் நம்பிக்கை வைத்ததாலும்தான் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என நாம் சச்சினை கொண்டாடிவருகிறோம். இப்போட்டிக்கு பிறகு சச்சினின் ஓப்பனிங் குறித்து அவரது சாதனைகளே பேசும். அவர் ஏன் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஒருநாள் போட்டியில் தனக்கான புதிய அத்தியாயத்தை அவர் எழுத தொடங்கியது இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையும் படிங்க:நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'