கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களால் வீசப்படும் நோ பாலை கவனிப்பதற்குத் தனியாக, ஒரு அம்பயரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எழுந்தது. இதற்கு முக்கியக் காரணம் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வீசப்பட்ட நோபால்களை மைதானத்தில் இருந்த கள நடுவர்கள் பார்க்கத் தவறியதே. மேலும், கடந்தாண்டு ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியிலும் வீசப்பட்ட நோ பால்களை அம்பயர்கள் கவனிக்கத் தவறிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நோ பால்களை மூன்றாவது நடுவரே, கண்காணிக்கும் வகையிலான சோதனை முயற்சிகள் கடந்தாண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் போது கடைபிடிக்கப்பட்டது.
இதனிடையே, தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், 'ஆஸ்திரேலியாவில் இம்மாதம் இறுதியில் தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நோ பால்களை மூன்றாவது நடுவரே கண்காணிப்பார் என்று தெரிவித்துள்ளது. அதன்படி மூன்றவாது நடுவர் பந்து வீசும் தருணத்தில், பந்துவீச்சாளரின் கால் எங்குள்ளது என்பதைக் கவனிப்பார். அவர் அந்த பந்து நோ பாலாக வீசப்பட்டால் அது குறித்து கள நடுவரிடம் தெரிவிப்பார்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், களத்தில் இருக்கும் நடுவர்கள், மூன்றாவது நடுவரின் அனுமதியில்லாமல் நோ பால்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளிப்படுத்தக் கூடாது. ஏனெனில் மூன்றாவது நடுவர்களே நோ பால்களுக்கு பொறுப்பு என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.