ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 16 ரன்களிலும், சுப்மன் கில் 33 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 63 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 200 ரன்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா - ரவீந்திர ஜடேஜா இணை பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 92 ரன்களையும், ஜடேஜா 66 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹர்திக் பாண்டியா - ரவீந்திர ஜடேஜா இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் லபுசாக்னே, ஸ்மித் ஆகியோர் தலா 7 ரன்களுடனும், ஹென்ரிக்ஸ் 22 ரன்களிலும், க்ரீன் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் ஆரோன் ஃபின்ச் அரைசதம் கடந்து, அணியின் வெற்றிக்காகப் போராடினார். பின்னர் 75 ரன்கள் எடுத்திருந்த ஃபின்ச், ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - அலெக்ஸ் கேரி இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவரது மனத்திலும் எண்ணம் தோன்றியது. ஏனெனில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மேக்ஸ்வெல் சிறிது நேரத்திலேயே அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து, பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
இதன்மூலம் இத்தொடரில் இரண்டாவது முறையாக அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் அலெக்ஸ் கேர் 39 ரன்களில் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 59 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல்லும் பும்ராவின் பந்துவீச்சில் போல்டாகினார். இதன்மூலம் இந்திய அணி தனது வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் நடராஜன், பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி நிறைவுசெய்தது.
இதையும் படிங்க:பாக்., அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!