நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய இதுவரை எந்த நாடுகளும் முயற்சி செய்யாதபோது, சந்திரயான் 2 திட்டத்தின்மூலம் இஸ்ரோ இப்பரிசோதனையை செய்ய முயற்சித்தது. இதற்காக, இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து தொலைதூரம் கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ஆம் தேதி பிரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 1:30 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவின் தென்பகுதியில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது விக்ரம் லேண்டரிலிருந்து சமிக்ஞை (சிக்னல்) துண்டிக்கப்பட்டது. இதனால், இஸ்ரோ தலைவர் சிவன், இத்திட்டத்தில் பணிபுரிந்த ஆராய்ச்சியாளர்கள் சோகத்தில் இருந்தனர்.