இந்திய அணியின் முன்னாள் கேப்டன், உலகக்கோப்பை நாயகன், பெஸ்ட் ஃபினிஷர், ஐசிசி நடத்திய மூன்று வடிவிலான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என புகழின் உச்சியிலிருந்தவர் கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி.
கடந்தாண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காத தோனி, மீண்டும் எப்போது சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், திடீரென ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம், மணல் ஓவியத்தில் தோனியின் உருவப்படத்தை வரைந்து, தங்களது அன்பின் வெளிப்பாட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவர், தோனி, அவரது மகள் ஸிவாவை கொஞ்சும் உருவப்படத்தை போர்வையாக நெய்து அசத்தியுள்ளார்.மேலும் அவருக்கு இதனை நினைவுப் பரிசாக வழங்கவும் முடிவுசெய்துள்ளார்.
இது குறித்து அப்புசாமி கூறுகையில், எனக்கு கிரிக்கெட்டில் மிகுந்த அர்வமுள்ளது. அதிலும் சச்சின் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வீரர். அதனால் அவரது உருவப்படத்தை பேர்வையில் வடிவமைத்து, அவருக்கு பரிசளித்தேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு, என்னை குடும்பத்துடன் நேரில் சந்தித்து பாராட்டினார்.