சர்வதேச கிரிக்கெட்டில் முழுமையான டெஸ்ட் வீரர் என்ற அடையாளத்துடன் வலம்வருபவர் புஜாரா. வருடத்திற்கு 8 முதல் 12 டெஸ்ட் போட்டிகள் வரை ஆடிவரும் இவர், ஐபிஎல் தொடரின்போது இங்கிலாந்து கவுண்டி அணிக்காக ஆட சென்றுவிடுவார்.
ஆனால், கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் நடந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் மனரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது கிரிக்கெட் பயிற்சியை ராஜ்கோட்டில் மீண்டும் இந்திய வீரர் புஜாரா தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''நாம் மனரீதியாக பலமாக இருந்தால் எவ்வளவு பெரிய இடைவெளியையும் எளிதாகக் கடக்கலாம். டெஸ்ட் போட்டிகள் இல்லாத நேரத்தில் உள்ளூர் தொடர்களில் பங்கேற்பேன். அதில் எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. மனரீதியாக எழும் சவால்களை எதிர்கொள்வதில் எனக்கு இதுவரை பிரச்னை இருந்ததில்லை.
வாரத்திற்கு மூன்று நாள்கள் பயிற்சி செய்து வருகிறேன். என்னுடன் சில செளராஷ்டிரா கிரிக்கெட்டர்கள் பயிற்சி செய்கிறார்கள். இன்னும் எத்தனை மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என தெரியவில்லை. ஆனால் அதற்கு தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க:இதே நாள், 1983: உலகக்கோப்பை சரித்திரத்தை மாற்றிய கபில் தேவ் அணி!