இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒன்றிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் காலை 9.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டுமே தொடரைக் கைப்பற்றுவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்ற நிலை உள்ளது.
அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்திலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறிய நிலையில், நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரைச் சமன்செய்யும் என்ற சூழலில் களமிறங்கவுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுமா இந்தியா?
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து சாதித்தது.
அதிலும் அகமதாபாத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியிருந்தது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது.
இத்தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஃபார்மில் உள்ளதால், நாளைய போட்டியிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்தத் தொடரில் புஜாரா, ரஹானே ஆகியோரது ஃபார்ம் குறித்த கேள்விகள் அதிகரித்துவருகின்றன.
இதன் காரணமாக நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், அக்சர் பட்டேல் இணை இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையைத் தொடர்ந்து நிலைகுலையச் செய்துவருகிறது.
அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது இடத்தை உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரைச் சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றிருந்தாலும், இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.