இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் ஐசிசியின் மகளிருக்கான டி20 தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியானது. இந்தப் பட்டியலில் இந்தியா அணியைச் சேர்ந்த இளம் வீராங்கனையான ஷாபாலி வர்மா ஆச்சரியப்படுத்தும் வகையில் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் 57 இடங்கள் முன்னேறி, 30ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 15 வயதே ஆன இவர் இளம் வயதில் சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்றவர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.
மேலும் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தையும், இதற்கு முன் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்தியாவின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 7ஆவது இடத்தையும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீட் கவுர் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.