இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தலைசிறந்த அணியாக திகழ்ந்தாலும், சொந்த மண்ணில் சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டே அதிக வெற்றிகளைப் படைக்கின்றனர் என்ற விமர்சனம் இந்திய அணி மீது இருந்தது. ஆனால், சமீபகாலமாக இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் திறன் இருந்தது. தற்போது இவர்களது திறன் இன்னும் ஒரு படி உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில், இந்திய அணியின் பவுலிங் ட்ரியோ (இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி) ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி இரண்டு இன்னிங்ஸிலும் ஆல் அவுட்டாகியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 106 ரன்களுக்குச் சுருண்டது. அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 347 ரன்களைச் சேர்த்து. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.