தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மழை ஆடிய ஆட்டத்தால் கைவிடப்பட்ட பாகிஸ்தான் - ஆஸி. ஆட்டம்...! - Captain Babar Azam

சிட்னி: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, மழையால் கைவிடப்பட்டது.

the-first-ausvpak-t20i-abandoned-due-to-rain

By

Published : Nov 3, 2019, 5:41 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் - ஃபக்கர் சமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி வீசப்பட்ட இரண்டாவது பந்திலேயே தொடக்க வீரர் ஃபக்கர் சமான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹாரிஸ் சோஹைல் 4 ரன்களில் வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து களமிறங்கிய ரிஸ்வான் பாபர் அஸாமுடன் ஜோடி சேர்ந்தார்.

பாபர் அஸாம்

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட பாபர் அஸாம் - ரிஸ்வான் இணை நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், ரிஸ்வான் 31 ரன்களுக்கு துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் 13ஆவது ஓவர் வீசப்பட்டபோது மழை குறுக்கிட்டது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்

மழை நின்ற பின் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதையடுத்து பாகிஸ்தான் அணி பாபர் அஸாமின் பொறுப்பான ஆட்டத்தால் 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத பாபர் அஸாம் 59 ரன்கள் எடுத்தார். இதையடுத்து டி/எல் விதிமுறைப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 119 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஃபின்ச், வார்னர் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஃபின்ச் 3ஆவது ஓவரில் 6, 4, 4, 4, 0, 4, 1 என மொத்தமாக 26 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். இதையடுத்து மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நடுவர்களால் கைவிடப்பட்டது.

இந்த அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி, வில்லியம்சன் போல் எனது பேட்டிங்கும் கேப்டன்சியால் பாதிக்காது!

ABOUT THE AUTHOR

...view details